புதுப்பொலிவு பெறும் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில்

செய்திகள்
376 Views

புதுப்பொலிவு பெறும் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் – வல்வையூர் அப்பாண்ணா

ஸ்ரீ முத்துமாரி அம்பாள் திருக்கோவில் பிரதம குரு சிவஸ்ரீ சோமாஸ்கந்த தண்டாயுதபாணி தேசிகர் அவர்களால் 06-09-2018 வியாழக்கிழமை காலை   08.35- 10.20 வரை உள்ள முகூர்த்த வேளைவில் அம்பாளுக்கும் பரிவார மூர்த்தங்களுக்கும் பாலஸ்தானம் செய்து வைக்கப்பட்டது. சங்காபிஷேக மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறிய அமைவிடத்தில் அம்பாளும் பரிவார மூர்த்தங்களும் – உற்சவ மூர்த்தங்களும் அமர்ந்திருக்க நான்கு காலமும் (விசேட விழாக்கள் எதுவுமின்றி) சாதாரண பூசைகள் நடைபெற்று வருகின்றன.    

பாலஸ்தானத்திற்கு முன்னரே கோவில் திருப்பணி வேலைகளை நன்கு திட்டமிட்டிருந்த தர்மகர்த்தா சபையினர் பாலஸ்தானம் முடிந்த கையோடு துரிதமாக செயற்பட்ட காரணத்தால் குறித்த காலப்பகுதிக்கு முன்னரே பெருமளவு வேலைகள் பூர்த்தியாகியுள்ளன. 

வாசலுக்கு நேராக – கழுவேறிக்கு அண்மித்த பகுதியிலிருந்து மேற்கு நோக்கிப் பார்க்கிறோம். கோபுர வாசல் மண்டபத்தின் மேலே – விளிம்பில் – அம்பாள் – கணபதி – முருகன் இரு மருங்கும் சிங்கங்கள், மூலைகளில் பூத கணங்கள்(இவை புதிய அமைப்பு), நெடிதுயர்ந்து நிற்கும் கோபுரம் ஆகியவை மை தீட்டப்பட்டு அழகுற உள்ளன.

முன் மண்டப விதானத்தின் கீழ்ப்புறம் கீறப்பட்டிருக்கும் அந்நாளைய ஓவியம் பழமை பேணும் பாங்கில் அப்படியே விடப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. 

மண்டபம் தாண்டி உள்ளே கோபுர வாசலை அண்மிக்கிறோம். கோபுர வாசலில் இரு புறமும் பீடத்துடன் சேர்ந்து 8’ உயரம் வரை உள்ள துவார பாலகிகள் கையில் கதாயுதங்களுடன் வாசல் காத்து வருகின்றனர். அவற்றின் காலடியில் அமர்ந்த நிலையில் உள்ள சிங்கங்கள் நம்மை விழித்துப் பார்க்கின்றன.    

கோபுர வாசலின் சரி நடுவே, ஒரு மங்கை கையில் செடியுடன் காணப்படும் இரு புறமும் உள்ள நெடிய கருங்கற் தூண்கள் ஒரே கல்லினால் ஆனவை. அந்த கருங்கற் தூண்களுக்கு வர்ணம் தீட்டி அதன் அழகினைச் சிதைக்காமல் – வாணிஸ் செய்து மெருகேற்றியிருப்பது அற்புதம். அதற்காக குறித்த ஓவியரையோ – வர்ணம் தீட்டுபவரையோ எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

உட்பிரகாரத்தின் உள்ளே எந்த மூலையில் நின்று பார்த்தாலும் பளிச்சென ஒளிரும் தூண்களின் வரிசையும்- வில்லு மண்டபத்தின் மேற்கூரைப் பகுதியும் வர்ணக் கலவைகளின் அலங்காரத்தினால் கண்ணைப் பறிக்கின்றது.  உட்பிரகாரத்தின் வில்லு மண்டபம் முழுவதும் புதிய அலங்கார மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. பாரிவார மூர்த்தங்களின் சந்நிதிகள், கருவறைகளின் தூபிகள், சண்டேஸ்வரியின் தனிச் சந்நிதி, மின் அறை, வசந்த மண்டபம், யாக சாலை சங்காபிஷேக மண்டபத்தின் மேலே காணப்படும் கிழக்கு நோக்கிய சிலை வடிவங்கள் அனைத்தும் அழகுற வர்ணம் தீட்டப்பட்டுள்ளது. சங்காபிஷேக மண்டபத்தின் மேற்கு ஓரமாக – வைகாசி பொங்கல் நடைபெறும் இடத்தில், 5 அடுப்புக்கள் கொண்ட நீண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.(இது ஒரு புதிய அமைப்பு) நிருத்த மண்டபத்தின் வாசலருகே (உருத்திராபிஷேக மண்டபம்) இரு துவார பாலகிகள் உள்ளனர். (இது ஒரு புதிய அமைப்பு)

வெளிப்புறச்சுவர்களும், சுவர்களை அலங்கரிக்கின்ற கவசங்களும், வடக்கிலும் – மேற்கிலும் சுவர்களின் மையப்பகுதிகளில் காணப்படுகின்ற அம்பாள் சிலைகளும் – சிங்கங்களும் , சுவரின் மூலைகளில் உள்ள பூத கணங்களும் பல நிறங்களில் பளிச்சென்றிருக்கிறது. தெற்கு வாசலில் வெளிப்புறத்தில் ஏற்கனவே தீட்டப்பட்டிருந்த துவார பாலகிகளின் ஒவியங்களுடன் இரு புறமும் சுவர் முழுவதிலுமாகக்(10’*10’) கீறப்பட்டுள்ள சிங்கங்களின் மிகப்பெரிய ஓவியங்கள் நம்மைப் பயமுறுத்துகின்றன. (இது ஒரு புதிய அமைப்பு)

மின் அறை, தேர்க் கொட்டகைகள் சப்பறக் கொட்டகைகள், அறநெறிப் பாடசாலை, அன்னதான  மண்டபம் ஆகியன வேறுபாடில்லாத ஒரே ஆரேஞ்சு + செம்மஞ்சள் வர்ண அலங்காரத்தில் ஜொலிக்கிறது. 

அரச மரத்தின் கீழே அமர்ந்துள்ள வைரவப்பெருமானுக்கும் தேர் முட்டிக்கு கிழக்காக உள்ள சிறு கொட்டகையில் – பாலஸ்தான வேளையில் குடியமர்த்தப்பட்டார். அதன் பின்னர் வைரவர் கோவிலும் – தேர் முட்டியும் புது வர்ணங்களில் அழகு காண்பிக்கின்றன. மோர் மடம் பச்சை வர்ணத்தில் பளிச்சென ஜொலிக்கிறது. திருமண மண்டபத்தின் முகப்பு வாசலின் மையத்தில் ஒரு நுழை வாசலும் – அதன் மேலே ஒரு திருமணக் காட்சியும் அமைப்பதற்கான வேலைகளும் இரவு பகலாக துரித கதியில் நடைபெற்று வருகிறது. சிற்ப உருவமைப்பு வேலைகள் அனைத்தும் தமிழ் நாடு – நாகை மாவட்டம் – திருவெண்காடு சிற்பாசிரியர் திரு R. தியாகராஜன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

கோவிலின் வடக்கு மூலையில், யாகசாலைக்கும் வசந்த மண்டபத்திற்கும் இடைப்பட்ட அலுவலக அறைக்கு மேலே அம்பாளது மகிடாசூர சம்ஹார காட்சி சிலை வடிவில் அமைக்கப்பட்டு வருகிறது. இன்னமும் முற்றுப் பெறாத நிலையிலுள்ள இந்த தத்ரூபமான சிலையமைப்பு வீதியிலிருந்தே பார்க்கக் கூடியதான – பெரிதான உருவமைப்பாக இருக்கிறது.

குறித்த இரண்டு வேலைகளைத் தவிர, ஏனைய சிலை அமைப்பு வேலைகளும் கோபுரம் உட்பட உள்ளும் புறமுமாக மை தீட்டும் வேலைகளும் முற்றுப்பெற்று விட்டன. ஆனாலும் சிலை அமைப்புகளுக்கோ – சித்திரங்களுக்கோ கண் வைக்கும் வேலைகள் மட்டும் நடைபெறாமல், அனைத்தும் கறுப்புச் சேலைகளினால் மூடப்பட்டிருக்கின்றது. கும்பாபிஷேகத்திற்கு முன்னரான ஒரு முகூர்த்த வேளையில்  கண்கள் திறந்து வைக்கப்படும்.

02-12-2018 ஞாயிற்றுகிழமை முதல் யந்திர பூசைக்கான மந்திர உச்சாடன நிகழ்வுகள் ஆரம்பமாகி  தைப்பொங்கல் தினத்தன்று பகலுடன் நிறைவுக்கு வரும். தைப்பொங்கலுக்கும் – எண்ணைக் காப்புச் சாத்தப்படும் முதல் நாள் வரை மேற்படி யந்திர தகடுகள் நித்திய பூசையில் வைக்கப்படும்.     

21-01-2019 தைப்பூசத்தினத்தன்று காலை  09.36- 09.48 வரையுள்ள நன் முகூர்த்த வேளையில் ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான சம்பு ரோசஷண அஷ்டபந்தன நவகுண்டபசஷ மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. 

மிகக்குறுகிய 12 நிமிட நேர இடைவெளியில்  மகா கும்பாபிஷேக முகூர்த்த நேரம் அமைந்துள்ளதால், கோபுரம் – பண்டிகைகளுக்குக் கலசம் வைக்கும் நிகழ்வும், கருவறையில் அம்பாளுக்கும் ஏனைய பாரிவார மூர்த்தங்களுக்கும் கும்பாபிஷே நிகழ்வும் ஒரே வேளையில் நடைபெறும் அற்புதக் காட்சியினை அனைவரும் பார்த்துப் பேறடையலாம்.

அம்பாள் திருக்கோவிலின் பிரதம குருவான   சிவஸ்ரீ சோமாஸ்கந்த தண்டபாணிக தேசிகர் அவர்கள் மகா கும்பாபிஷே  நிகழ்வுகளை முன்னின்று நடாத்தி வைப்பார். இவரது மருமகனான  சிவஸ்ரீ மு.தயாபரக் குருக்கள்(அம்பாள் தேவஸ்தானம்) இராஜகோபுர கும்பாபிஷேக குருவாகக் காரிய மாற்றுவார். நாயன்மார்கட்டு – அரசடி பிள்ளையார் ஆலய பிரதமகுரு  சிவஸ்ரீ சதா மகாலிங்க சிவக்குருக்கள் சர்வசாதகாசியாராகப்   பணி செய்வார்.  

இவர்களை விட இன்னும் 30ற்கும் அதிகமான அனுவபம் வாய்ந்த குருமார்கள்   கும்பாபிஷேக வேளைக்கு முன்னும் பின்னுமாக வேண்டி அனைத்துக் காரியங்களுக்கும் உதவியாகப் பட்டியவிடப்பட்டிருக்கிறது.

கும்பாபிஷேகத்தன்று இரவு பரிவார மூர்த்தங்களுக்கான பூசைகள் நிறைவடைந்த பின்னர் – வசந்த மண்டபப் பூசையுடன் அம்பாள் சிங்க வாகனத்தில் வீதி உலா வருவார். தொடர்ந்து 45 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற்று 06-03-2019 புதன்கிழமை நடைபெறவுள்ள மகா சங்காபிஷேகத்துடன் (1008) நிகழ்வுகள் அனைத்தும் நிறைவுக்கு வர அம்பாள் திருவருள் பாலித்திருக்கிறது.  .